HolyIndia.Org
Holy India Org Add New Temple

தேவாரம்பாடல்எண்[1-8250*] கோயில் : [1-275] வார்த்தைதேடல்

1-3/3723
முறியுறு நிறமல்கு முகிழ்முலை மலைமகள் வெருவமுன்
வெறியுறு மதகரி யதள்பட வுரிசெய்த விறலினர்
நறியுறும் இதழியின் மலரொடு நதிமதி நகுதலை
செறியுறு சடைமுடி யடிகள்தம் வளநகர் சேறையே.

2-3/3724
புனமுடை நறுமலர் பலகொடு தொழுவதோர் புரிவினர்
மனமுடை அடியவர் படுதுயர் களைவதோர் வாய்மையர்
இனமுடை மணியினோ டரைசிலை யொளிபெற மிளிர்வதோர்
சினமுதிர் விடையுடை யடிகள்தம் வளநகர் சேறையே.

3-3/3725
புரிதரு சடையினர் புலியதள் அரையினர் பொடிபுல்கும்
எரிதரும் உருவினர் இடபம தேறுவ ரீடுலா
வரிதரு வளையின ரவரவர் மகிழ்தர மனைதொறுந்
திரிதரு சரிதையர் உறைதரு வளநகர் சேறையே.

4-3/3726
துடிபடும் இடையுடை மடவர லுடனொரு பாகமா
இடிபடு குரலுடை விடையினர் படமுடை யரவினர்
பொடிபடும் உருவினர் புலியுரி பொலிதரும் அரையினர்
செடிபடு சடைமுடி யடிகள்தம் வளநகர் சேறையே.

5-3/3727
அந்தர முழிதரு திரிபுர மொருநொடி யளவினில்
மந்தர வரிசிலை யதனிடை யரவரி வாளியால்
வெந்தழி தரவெய்த விடலையர் விடமணி மிடறினர்
செந்தழல் நிறமுடை யடிகள்தம் வளநகர் சேறையே.

6-3/3728
மத்தர முறுதிறன் மறவர்தம் வடிவுகொ டுருவுடைப்
பத்தொரு பெயருடை விசயனை அசைவுசெய் பரிசினால்
அத்திரம் அருளும்நம் அடிகள தணிகிளர் மணியணி
சித்திர வளநகர் செறிபொழில் தழுவிய சேறையே.

7-3/3729
பாடினர் அருமறை முறைமுறை பொருளென அருநடம்
ஆடினர் உலகிடை அலர்கொடும் அடியவர் துதிசெய
வாடினர் படுதலை யிடுபலி யதுகொடு மகிழ்தருஞ்
சேடர்தம் வளநகர் செறிபொழில் தழுவிய சேறையே.

8-3/3730
கட்டுர மதுகொடு கயிலைநல் மலைநலி கரமுடை
நிட்டுரன் உடலொடு நெடுமுடி யொருபதும் நெரிசெய்தார்
மட்டுர மலரடி யடியவர் தொழுதெழ அருள்செயுஞ்
சிட்டர்தம் வளநகர் செறிபொழில் தழுவிய சேறையே.

9-3/3731
பன்றியர் பறவையர் பரிசுடை வடிவொடு படர்தர
அன்றிய அவரவர் அடியொடு முடியவை யறிகிலார்
நின்றிரு புடைபட நெடுவெரி நடுவெயோர் நிகழ்தரச்
சென்றுயர் வெளிபட அருளிய அவர்நகர் சேறையே.

10-3/3732
துகடுறு விரிதுகில் உடையவர் அமணெனும் வடிவினர்
விகடம துறுசிறு மொழியவை நலமில மெனவிடன்
முகிழ்தரும் இளமதி யரவொடும் அழகுற முதுநதி
திகழ்தரு சடைமுடி யடிகள்தம் வளநகர் சேறையே.

11-3/3733
கற்றநன் மறைபயில் அடியவர் அடிதொழு கவினுறு
சிற்றிடை யவளொடு மிடமென வுறைவதோர் சேறைமேற்
குற்றமில் புகலியுள் இகலறு ஞானசம் பந்தன
சொற்றக வுறமொழி பவரழி விலர்துயர் தீருமே.

12-4/4865
பெருந்திரு இமவான் பெற்ற 
பெண்கொடி பிரிந்த பின்னை 
வருந்துவான் தவங்கள் செய்ய 
மாமணம் புணர்ந்து மன்னும் 
அருந்திரு மேனி தன்பால் 
அங்கொரு பாக மாகத் 
திருந்திட வைத்தார் சேறைச் 
செந்நெறிச் செல்வ னாரே.

13-4/4866
ஓர்த்துள வாறு நோக்கி 
உண்மையை உணராக் குண்டர் 
வார்த்தையை மெய்யென் றெண்ணி 
மயக்கில்வீழ்ந் தழுந்து வேனைப் 
பேர்த்தெனை ஆளாக் கொண்டு 
பிறவிவான் பிணிக ளெல்லாந் 
தீர்த்தருள் செய்தார் சேறைச் 
செந்நெறிச் செல்வ னாரே.

14-4/4867
ஒன்றிய தவத்து மன்னி 
உடையனாய் உலப்பில் காலம் 
நின்றுதங் கழல்க ளேத்தும் 
நீள்சிலை விசய னுக்கு 
வென்றிகொள் வேட னாகி 
விரும்பிவெங் கான கத்துச் 
சென்றருள் செய்தார் சேறைச் 
செந்நெறிச் செல்வ னாரே.

15-4/4868
அஞ்சையும் அடக்கி ஆற்ற 
லுடையனாய் அநேக காலம் 
வஞ்சமில் தவத்துள் நின்று 
மன்னிய பகீர தற்கு 
வெஞ்சின முகங்க ளாகி 
விசையொடு பாயுங் கங்கைச் 
செஞ்சடை யேற்றார் சேறைச் 
செந்நெறிச் செல்வ னாரே.

16-4/4869
நிறைந்தமா மணலைக் கூப்பி 
நேசமோ டாவின் பாலைக் 
கறந்துகொண் டாட்டக் கண்டு 
கறுத்ததன் தாதை தாளை 
எறிந்தமா ணிக்கப் போதே 
எழில்கொள்சண் டீசன் என்னச் 
சிறந்தபே றளித்தார் சேறைச் 
செந்நெறிச் செல்வ னாரே.

17-4/4870
விரித்தபல் கதிர்கொள் சூலம் 
வெடிபடு தமரு கங்கை 
தரித்ததோர் கோல காலப் 
பயிரவ னாகி வேழம் 
உரித்துமை யஞ்சக் கண்டு 
ஒண்டிரு மணிவாய் விள்ளச் 
சிரித்தருள் செய்தார் சேறைச் 
செந்நெறிச் செல்வ னாரே.

18-4/4871
சுற்றுமுன் இமையோர் நின்று 
தொழுதுதூ மலர்கள் தூவி 
மற்றெமை உயக்கொள் என்ன 
மன்னுவான் புரங்கள் மூன்றும் 
உற்றொரு நொடியின் முன்னம் 
ஒள்ளழல் வாயின் வீழச் 
செற்றருள் செய்தார் சேறைச் 
செந்நெறிச் செல்வ னாரே.

19-4/4872
முந்தியிவ் வுலக மெல்லாம் 
படைத்தவன் மாலி னோடும் 
எந்தனி நாத னேயென் 
றிறைஞ்சிநின் றேத்தல் செய்ய 
அந்தமில் சோதி தன்னை 
அடிமுடி யறியா வண்ணஞ் 
செந்தழ லானார் சேறைச் 
செந்நெறிச் செல்வ னாரே.

20-4/4873
ஒருவரும் நிக ரிலாத 
ஒண்டிறல் அரக்கன் ஓடிப் 
பெருவரை யெடுத்த திண்டோ ள் 
பிறங்கிய முடிகள் இற்று 
மருவியெம் பெருமா னென்ன 
மலரடி மௌ;ள வாங்கித் 
திருவருள் செய்தார் சேறைச் 
செந்நெறிச் செல்வ னாரே.

21-5/5997
பூரி யாவரும் புண்ணியம் பொய்கெடுங் 
கூரி தாய அறிவுகை கூடிடுஞ் 
சீரி யார்பயில் சேறையுட் செந்நெறி 
நாரி பாகன்றன் நாமம் நவிலவே.

22-5/5998
என்ன மாதவஞ் செய்தனை நெஞ்சமே 
மின்னு வார்சடை வேதவி ழுப்பொருள் 
செந்நெ லார்வயல் சேறையுட் செந்நெறி 
மன்னு சோதிநம் பால்வந்து வைகவே.

23-5/5999
பிறப்பு மூப்புப் பெரும்பசி வான்பிணி 
இறப்பு நீங்கியிங் கின்பம்வந் தெய்திடுஞ் 
சிறப்பர் சேறையுட் செந்நெறி யான்கழல் 
மறப்ப தின்றி மனத்தினுள் வைக்கவே.

24-5/6000
மாடு தேடி மயக்கினில் வீழ்ந்துநீர் 
ஓடி யெய்த்தும் பயனிலை ஊமர்காள் 
சேடர் வாழ்சேறைச் செந்நெறி மேவிய 
ஆட லான்றன் அடியடைந் துய்ம்மினே.

25-5/6001
எண்ணி நாளும் எரியயிற் கூற்றுவன் 
துண்ணென் றோன்றிற் றுரக்கும் வழிகண்டேன் 
திண்ணன் சேறைத் திருச்செந் நெறியுறை 
அண்ண லாருளர் அஞ்சுவ தென்னுக்கே.

26-5/6002
தப்பில் வானந் தரணிகம் பிக்கிலென் 
ஒப்பில் வேந்தர் ஒருங்குடன் சீறிலென் 
செப்ப மாஞ்சேறைச் செந்நெறி மேவிய 
அப்ப னாருளர் அஞ்சுவ தென்னுக்கே.

27-5/6003
வைத்த மாடும் மடந்தைநல் லார்களும் 
ஒத்தொவ் வாதவுற் றார்களு மென்செய்வார் 
சித்தர் சேறைத் திருச்செந் நெறியுறை 
அத்தர் தாமுளர் அஞ்சுவ தென்னுக்கே.

28-5/6004
குலங்க ளென்செய்வ குற்றங்க ளென்செய்வ 
துலங்கி நீநின்று சோர்ந்திடல் நெஞ்சமே 
இலங்கு சேறையிற் செந்நெறி மேவிய 
அலங்க னாருளர் அஞ்சுவ தென்னுக்கே.

29-5/6005
பழகி னால்வரும் பண்டுள சுற்றமும் 
விழவி டாவிடில் வேண்டிய எய்தொணா 
திகழ்கொள் சேறையிற் செந்நெறி மேவிய 
அழக னாருளர் அஞ்சுவ தென்னுக்கே.

30-5/6006
பொருந்து நீண்மலை யைப்பிடித் தேந்தினான் 
வருந்த வு[ன்றி மலரடி வாங்கினான் 
திருந்து சேறையிற் செந்நெறி மேவியங் 
கிருந்த சோதியென் பார்க்கிட ரில்லையே.
Thiruvidaivoi