HolyIndia.Org
Holy India Org Add New Temple

தேவாரம்பாடல்எண்[1-8250*] கோயில் : [1-275] வார்த்தைதேடல்

1-1/537
ஒல்லையாறி உள்ளமொன்றிக் கள்ளம்ஒழிந் துவெய்ய 
சொல்லையாறித் தூய்மைசெய்து காமவினை யகற்றி 
நல்லவாறே உன்றன்நாமம் நாவில்நவின் றேத்த 
வல்லவாறே வந்துநல்காய் வலிவலமே யவனே.

2-1/538
இயங்குகின்ற இரவிதிங்கள் மற்றுநற் றேவரெல்லாம் 
பயங்களாலே பற்றிநின்பால் சித்தந்தெளி கின்றிலர் 
தயங்குசோதி சாமவேதா காமனைக்காய்ந் தவனே 
மயங்குகின்றேன் வந்துநல்காய் வலிவல மேயவனே.

3-1/539
பெண்டிர்மக்கள் சுற்றமென்னும் பேதைப் பெருங்கடலை 
விண்டுபண்டே வாழமாட்டேன் வேதனை நோய்நலியக் 
கண்டுகண்டே யுன்றன்நாமங் காதலிக் கின்றதுள்ளம் 
வண்டுகிண்டிப் பாடுஞ்சோலை வலிவல மேயவனே.

4-1/540
மெய்யராகிப் பொய்யைநீக்கி வேதனை யைத்துறந்து 
செய்யரானார் சிந்தையானே தேவர் குலக்கொழுந்தே 
நைவன்நாயேன் உன்றன்நாமம் நாளும் நவிற்றுகின்றேன் 
வையம்முன்னே வந்துநல்காய் வலிவல மேயவனே.

5-1/541
துஞ்சும்போதுந் துற்றும்போதுஞ் சொல்லுவ னுன்றிறமே 
தஞ்சமில்லாத் தேவர்வந்துன் தாளிணைக் கீழ்ப்பணிய 
நஞ்சையுண்டாய்க் கென்செய்கேனோ நாளும் நினைந்தடியேன் 
வஞ்சமுண்டென் றஞ்சுகின்றேன் வலிவல மேயவனே.

6-1/542
புரிசடையாய் புண்ணியனே நண்ணலார் மூவெயிலும் 
எரியஎய்தாய் எம்பெருமான் என்றிமை யோர்பரவும் 
கரியுரியாய் காலகாலா நீலமணி மிடற்று 
வரியரவா வந்துநல்காய் வலிவல மேயவனே.

7-1/543
தாயுநீயே தந்தைநீயே சங்கர னேயடியேன் 
ஆயுநின்பால் அன்புசெய்வான் ஆதரிக் கின்றதுள்ளம் 
ஆயமாய காயந்தன்னுள் ஐவர்நின் றொன்றலொட்டார் 
மாயமேயென் றஞ்சுகின்றேன் வலிவல மேயவனே.

8-1/544
நீரொடுங்குஞ் செஞ்சடையாய் நின்னுடைய பொன்மலையை 
வேரொடும்பீழ்ந் தேந்தலுற்ற வேந்தனி ராவணனைத் 
தேரொடும்போய் வீழ்ந்தலறத் திருவிர லால்அடர்த்த 
வாரொடுங்கும் கொங்கைபங்கா வலிவல மேயவனே.

9-1/545
ஆதியாய நான்முகனு மாலு மறிவரிய 
சோதியானே நீதியில்லேன் சொல்லுவன் நின்றிறமே 
ஓதிநாளும் உன்னையேத்தும் என்னை வினைஅவலம் 
வாதியாமே வந்துநல்காய் வலிவல மேயவனே.

10-1/546
மூபொதியிலானே பூவணத்தாய் பொன்திக ழுங்கயிலைப் 
பதியிலானே பத்தர்சித்தம் பற்றுவி டாதவனே 
விதியிலாதார் வெஞ்சமணர் சாக்கிய ரென்றிவர்கள் 
மதியிலாதார் என்செய்வாரோ வலிவல மேயவனே. 
 
(மூ)பொதியில் என்பது பொதிகைமலை. அது வைப்புத்தலங்களிலொன்று.

11-1/547
வன்னிகொன்றை மத்தஞ்சூடும் வலிவல மேயவனைப் 
பொன்னிநாடன் புகலிவேந்தன் ஞானசம் பந்தன்சொன்ன 
பன்னுபாடல் பத்தும்வல்லார் மெய்த்தவத் தோர்விரும்பும் 
மன்னுசோதி ஈசனோடே மன்னி யிருப்பாரே.

12-1/1326
பூவியல் புரிகுழல் வரிசிலை நிகர்நுதல் 
ஏவியல் கணைபிணை எதிர்விழி யுமையவள் 
மேவிய திருவுரு வுடையவன் விரைமலர் 
மாவியல் பொழில்வலி வலமுறை யிறையே.

13-1/1327
இட்டம தமர்பொடி யிசைதலின் நசைபெறு 
பட்டவிர் பவளநல் மணியென அணிபெறு 
விட்டொளிர் திருவுரு வுடையவன் விரைமலர் 
மட்டமர் பொழில்வலி வலமுறை யிறையே.

14-1/1328
உருமலி கடல்கடை வுழியுல கமருயிர் 
வெருவுறு வகையெழு விடம்வெளி மலையணி 
கருமணி நிகர்களம் உடையவன் மிடைதரு 
மருமலி பொழில்வலி வலமுறை யிறையே.

15-1/1329
அனல்நிகர் சடையழல் அவியுற வெனவரு 
புனல்நிகழ் வதுமதி நனைபொறி அரவமும் 
எனநினை வொடுவரு மிதுமெல முடிமிசை 
மனமுடை யவர்வலி வலமுறை யிறையே.

16-1/1330
பிடியதன் உருவுமை கொளமிகு கரியது 
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர் 
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை 
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே.

17-1/1331
தரைமுதல் உலகினில் உயிர்புணர் தகைமிக 
விரைமலி குழலுமை யொடுவிர வதுசெய்து 
நரைதிரை கெடுதகை யதுவரு ளினனெழில் 
வரைதிகழ் மதில்வலி வலமுறை யிறையே.

18-1/1332
நலிதரு தரைவர நடைவரும் இடையவர் 
பொலிதரு மடவர லியர்மனை யதுபுகு 
பலிகொள வருபவன் எழில்மிகு தொழில்வளர் 
வலிவரு மதில்வலி வலமுறை யிறையே.

19-1/1333
இரவணன் இருபது கரமெழில் மலைதனின் 
இரவண நினைதர அவன்முடி பொடிசெய்து 
இரவணம் அமர்பெயர் அருளின னகநெதி 
இரவண நிகர்வலி வலமுறை யிறையே.

20-1/1334
தேனமர் தருமலர் அணைபவன் வலிமிகும் 
ஏனம தாய்நிலம் அகழ்அரி யடிமுடி 
தானணை யாவுரு வுடையவன் மிடைகொடி 
வானணை மதில்வலி வலமுறை யிறையே.

21-1/1335
இலைமலி தரமிகு துவருடை யவர்களும் 
நிலைமையில் உணலுடை யவர்களும் நினைவது 
தொலைவலி நெடுமறை தொடர்வகை யுருவினன் 
மலைமலி மதில்வலி வலமுறை யிறையே.

22-1/1336
மன்னிய வலிவல நகருறை யிறைவனை 
இன்னியல் கழுமல நகரிறை யெழில்மறை 
தன்னியல் கலைவல தமிழ்விர கனதுரை 
உன்னிய வொருபதும் உயர்பொருள் தருமே.

23-6/6722
நல்லான்காண் நான்மறைக ளாயி னான்காண் நம்பன்காண் நணுகாதார் புரமூன் றெய்த வில்லான்காண் விண்ணவர்க்கு மேலா னான்காண் மெல்லியலாள் பாகன்காண் வேத வேள்விச் சொல்லான்காண் சுடர்மூன்று மாயி னான்காண் தொண்டாகிப் பணிவார்க்குத் தொல்வான் ஈய வல்லான்காண் வானவர்கள் வணங்கி யேத்தும் வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.

24-6/6723
ஊனவன்காண் உடல்தனக்கோ ருயிரா னான்காண் உள்ளவன்காண் இல்லவன்காண் உமையாட் கென்றுந் தேனவன்காண் திருவவன்காண் திசையா னான்காண் தீர்த்தன்காண் பார்த்தன்றன் பணியைக் கண்ட கானவன்காண் கடலவன்காண் மலையா னான்காண் களியானை ஈருரிவை கதறப் போர்த்த வானவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும் வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.

25-6/6724
ஏயவன்காண் எல்லார்க்கு மியல்பா னான்காண் இன்பன்காண் துன்பங்க ளில்லா தான்காண் தாயவன்காண் உலகுக்கோர் தன்னொப் பில்லாத் தத்துவன்காண் உத்தமன்காண் தானே யெங்கும் ஆயவன்காண் அண்டத்துக் கப்பா லான்காண் அகங்குழைந்து மெய்வருந்தி யழுவார் தங்கள் வாயவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும் வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.

26-6/6725
உய்த்தவன்காண் உடல்தனக்கோர் உயிரா னான்காண் ஓங்காரத் தொருவன்காண் உலகுக் கெல்லாம் வித்தவன்காண் விண்பொழியும் மழையா னான்காண் விளைவவன்காண் விரும்பாதார் நெஞ்சத் தென்றும் பொய்த்தவன்காண் பொழிலேழுந் தாங்கி னான்காண் புனலோடு வளர்மதியும் பாம்புஞ் சென்னி வைத்தவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும் வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.

27-6/6726
கூற்றவன்காண் குணமவன்காண் குறியா னான்காண் குற்றங்க ளனைத்துங்காண் கோல மாய நீற்றவன்காண் நிழலவன்காண் நெருப்பா னான்காண் நிமிர்புன் சடைமுடிமேல் நீரார் கங்கை ஏற்றவன்காண் ஏழுலகு மாயி னான்காண் இமைப்பளவிற் காமனைமுன் பொடியாய் வீழ மாற்றவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும் வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.

28-6/6727
நிலையவன்காண் தோற்றவன்காண் நிறையா னான்காண் நீரவன்காண் பாரவன்காண் ஊர்மூன் றெய்த சிலையவன்காண் செய்யவாய்க் கரிய கூந்தல் தேன்மொழியை யொருபாகஞ் சேர்த்தி னான்காண் கலையவன்காண் காற்றவன்காண் காலன் வீழக் கறுத்தவன்காண் கயிலாய மென்னுந் தெய்வ மலையவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும் வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.

29-6/6728
பெண்ணவன்காண் ஆணவன்காண் பெரியோர்க் கென்றும் பெரியவன்காண் அரியவன்காண் அயனா னான்காண் எண்ணவன்காண் எழுத்தவன்காண் இன்பக் கேள்வி இசையவன்காண் இயலவன்காண் எல்லாங் காணுங் கண்ணவன்காண் கருத்தவன்காண் கழிந்தோர் செல்லுங் கதியவன்காண் மதியவன்காண் கடலேழ் சூழ்ந்த மண்ணவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும் வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.

30-6/6729
முன்னவன்காண் பின்னவன்காண் மூவா மேனி முதலவன்காண் முடிவவன்காண் மூன்று சோதி அன்னவன்காண் அடியார்க்கும் அண்டத் தார்க்கும் அணியவன்காண் சேயவன்காண் அளவில் சோதி மின்னவன்காண் உருமவன்காண் திருமால் பாகம் வேண்டினன்காண் ஈண்டுபுனற் கங்கைக் கென்றும் மன்னவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும் வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.

31-6/6730
நெதியவன்காண் யாவர்க்கும் நினைய வொண்ணா நீதியன்காண் வேதியன்காண் நினைவார்க் கென்றுங் கதியவன்காண் காரவன்காண் கனலா னான்காண் காலங்கள் ஊழியாக் கலந்து நின்ற பதியவன்காண் பழமவன்காண் இரதந் தான்காண் பாம்போடு திங்கள் பயில வைத்த மதியவன்காண் வானவர்கள் வணங்கி யேத்தும் வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.

32-6/6731
பங்கயத்தின் மேலானும் பால னாகி உலகளந்த படியானும் பரவிக் காணா கங்கைவைத்த சென்னியராய் அளக்க மாட்டா அனலவன்காண் அலைகடல்சூழ் இலங்கை வேந்தன் கொங்கலர்த்த முடிநெரிய விரலா லூன்றுங் குழகன்காண் அழகன்காண் கோல மாய மங்கையர்க்கோர் கூறன்காண் வானோ ரேத்தும் வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே.

33-7/7901
ஊனங் கைத்துயிர்ப் பாயுல கெல்லாம் 
 ஓங்கா ரத்துரு வாகிநின் றானை 
வானங் கைத்தவர்க் கும்மளப் பரிய 
 வள்ள லையடி யார்கள்தம் உள்ளத் 
தேனங் கைத்தமு தாகியுள் @றுந் 
 தேச னைத்திளைத் தற்கினி யானை 
மானங் கைத்தலத் தேந்தவல் லானை 
 வலிவ லந்தனில் வந்துகண் டேனே.

34-7/7902
பல்லடி யார்பணிக் குப்பரி வானைப்
 பாடியா டும்பத்தர்க் கன்புடை யானைச் 
செல்லடி யேநெருக் கித்திறம் பாது 
 சேர்ந்தவர்க் கேசித்தி முத்திசெய் வானை 
நல்லடி யார்மனத் தெய்ப்பினில் வைப்பை 
 நானுறு குறையறிந் தருள்புரி வானை 
வல்லடி யார்மனத் திச்சை உளானை 
 வலிவ லந்தனில் வந்துகண் டேனே.

35-7/7903
ஆழிய னாய்அகன் றேஉயர்ந் தானை
 ஆதியந் தம்பணி வார்க்கணி யானைக் 
கூழைய ராகிப்பொய் யேகுடிஓம்பிக் 
 குழைந்து மெய்யடி யார்குழுப் பெய்யும் 
வாழியர்க் கேவழு வாநெறி காட்டி 
 மறுபி றப்பென்னை மாசறுத் தானை 
மாழையொண் கண்ணுமை யைமகிழ்ந் தானை 
 வலிவ லந்தனில் வந்துகண் டேனே.

36-7/7904
நாத்தான் உன்றிற மேதிறம் பாது 
 நண்ணியண் ணித்தமு தம்பொதிந் தூறும் 
ஆத்தா னைஅடி யேன்றனக் கென்றும் 
 அளவி றந்தபல தேவர்கள் போற்றுஞ் 
சோத்தா னைச்சுடர் மூன்றிலும் ஒன்றித் 
 துருவி மால்பிர மன்னறி யாத 
மாத்தா னைமாத் தெனக்குவைத் தானை 
 வலிவ லந்தனில் வந்துகண் டேனே.

37-7/7905
நல்லிசை ஞானசம் பந்தனும் நாவினுக்
 கரசரும் பாடிய நற்றமிழ் மாலை 
சொல்லிய வேசொல்லி ஏத்துகப் பானைத் 
 தொண்ட னேன்அறி யாமை அறிந்து 
கல்லி யல்மனத் தைக்கசி வித்துக் 
 கழலடி காட்டியென் களைகளை அறுக்கும் 
வல்லியல் வானவர் வணங்க நின்றானை 
 வலிவ லந்தனில் வந்துகண் டேனே.

38-7/7906
பாடுமா பாடிப் பணியுமா றறியேன்
 பனுவுமா பனுவிப் பரவுமா றறியேன் 
தேடுமா தேடித் திருத்துமா றறியேன் 
 செல்லுமா செல்லச் செலுத்துமா றறியேன் 
கூடுமா றெங்ஙன மோவென்று கூறக் 
 குறித்துக் காட்டிக் கொணர்ந்தெனை ஆண்டு 
வாடிநீ வாளா வருந்தலென் பானை 
 வலிவ லந்தனில் வந்துகண் டேனே.

39-7/7907
பந்தித்த வல்வினைப் பற்றறப் பிறவிப்
 படுக டற்பரப் புத்தவிர்ப் பானைச் 
சந்தித் ததிற லாற்பணி பூட்டித் 
 தவத்தை ஈட்டிய தம்மடி யார்க்குச் 
சிந்தித் தற்கெளி தாய்த்திருப் பாதஞ் 
 சிவலோ கந்திறந் தேற்றவல் லானை 
வந்திப் பார்தம் மனத்தினுள் ளானை 
 வலிவ லந்தனில் வந்துகண் டேனே.

40-7/7908
எவ்வவர் தேவர் இருடிகள் மன்னர் 
 எண்ணிறந் தார்கள்மற் றெங்கும்நின் றேத்த 
அவ்வவர் வேண்டிய தேஅருள் செய்து 
 அடைந்தவர்க் கேஇட மாகிநின் றானை 
இவ்வவர் கருணையெங் கற்பகக் கடலை 
 எம்பெரு மான்அரு ளாய்என்ற பின்னை 
வவ்வியென் ஆவி மனங்கலந் தானை 
 வலிவ லந்தனில் வந்துகண் டேனே.

41-7/7909
திரியும் முப்புரஞ் செற்றதுங் குற்றத் 
 திறல ரக்கனைச் செறுத்ததும் மற்றைப் 
பெரிய நஞ்சமு துண்டதும் முற்றும் 
 பின்னை யாய்முன்ன மேமுளைத் தானை 
அரிய நான்மறை அந்தணர் ஓவா 
 தடிப ணிந்தறி தற்கரி யானை 
வரையின் பாவை மணாளனெம் மானை 
 வலிவ லந்தனில் வந்துகண் டேனே.

42-7/7910
ஏன்ற அந்தணன் தலையினை அறுத்து 
 நிறைக்க மாலுதி ரத்தினை ஏற்றுத் 
தோன்று தோண்மிசைக் களேபரந் தன்னைச் 
 சுமந்த மாவிர தத்தகங் காளன் 
சான்று காட்டுதற் கரியவன் எளியவன் 
 றன்னைத் தன்னி லாமனத் தார்க்கு 
மான்று சென்றணை யாதவன் றன்னை 
 வலிவ லந்தனில் வந்துகண் டேனே.

43-7/7911
கலிவ லங்கெட ஆரழல் ஓம்புங்
 கற்ற நான்மறை முற்றனல் ஓம்பும் 
வலிவ லந்தனில் வந்துகண் டடியேன் 
 மன்னும் நாவலா ரூரன்வன் றொண்டன் 
ஒலிகொள் இன்னிசைச் செந்தமிழ் பத்தும் 
 உள்ளத் தாலுகந் தேத்தவல் லார்போய் 
மெலிவில் வானுல கத்தவர் ஏத்த 
 விரும்பி விண்ணுல கெய்துவர் தாமே.
Thiruvidaivoi