HolyIndia.Org
Holy India Org Add New Temple

தேவாரம்பாடல்எண்[1-8250*] கோயில் : [1-275] வார்த்தைதேடல்

1-2/2659
செம்பொ னார்தரு வேங்கையும் ஞாழலுஞ் 
செருந்திசெண் பகமானைக் 
கொம்பும் ஆரமும் மாதவி சுரபுனை 
குருந்தலர் பரந்துந்தி 
அம்பொன் நேர்வரு காவிரி வடகரை 
மாந்துறை யுறைகின்ற 
எம்பி ரானிமை யோர்தொழு பைங்கழ 
லேத்துதல் செய்வோமே.

2-2/2660
விளவு தேனொடு சாதியின் பலங்களும் 
வேய்மணி நிரந்துந்தி 
அளவி நீர்வரு காவிரி வடகரை 
மாந்துறை உறைவானத் 
துளவ மால்மக னைங்கணைக் காமனைச் 
சுடவிழித் தவனெற்றி 
அளக வாணுதல் அரிவைதன் பங்கனை 
யன்றிமற் றறியோமே.

3-2/2661
கோடு தேன்சொரி குன்றிடைப் பூகமுங் 
கூந்தலின் குலைவாரி 
ஓடு நீர்வரு காவிரி வடகரை 
மாந்துறை யுறைநம்பன் 
வாடி னார்தலை யிற்பலி கொள்பவன் 
வானவர் மகிழ்ந்தேத்துங் 
கேடி லாமணி யைத்தொழ லல்லது 
கெழுமுதல் அறியோமே.

4-2/2662
இலவ ஞாழலும் ஈஞ்சொடு சுரபுன்னை 
இளமரு திலவங்கங் 
கலவி நீர்வரு காவிரி வடகரை 
மாந்துறை யுறைகண்டன் 
அலைகொள் வார்புனல் அம்புலி மத்தமும் 
ஆடர வுடன்வைத்த 
மலையை வானவர் கொழுந்தினை யல்லது 
வணங்குதல் அறியோமே.

5-2/2663
கோங்கு செண்பகங் குருந்தொடு பாதிரி 
குரவிடை மலருந்தி 
ஓங்கி நீர்வரு காவிரி வடகரை 
மாந்துறை யுறைவானைப் 
பாங்கி னாலிடுந் தூபமுந் தீபமும் 
பாட்டவி மலர்சேர்த்தித் 
தாங்கு வாரவர் நாமங்கள் நாவினில் 
தலைப்படுந் தவத்தோரே.

6-2/2664
பெருகு சந்தனங் காரகில் பீலியும் 
பெருமரம் நிமிர்ந்துந்திப் 
பொருது காவிரி வடகரை மாந்துறைப் 
புனிதனெம் பெருமானைப் 
பரிவி னாலிருந் திரவியும் மதியமும் 
பார்மன்னர் பணிந்தேத்த 
மருத வானவர் வழிபடு மலரடி 
வணங்குதல் செய்வோமே.

7-2/2665
நறவ மல்லிகை முல்லையும் மௌவலும் 
நாண்மல ரவைவாரி 
இறவில் வந்தெறி காவிரி வடகரை 
மாந்துறை யிறைஅன்றங் 
கறவ னாகிய கூற்றினைச் சாடிய 
அந்தணன் வரைவில்லால் 
நிறைய வாங்கி வலித்தெயி லெய்தவன் 
நிரைகழல் பணிவோமே.

8-2/2666
மந்த மார்பொழில் மாங்கனி மாந்திட 
மந்திகள் மாணிக்கம் 
உந்தி நீர்வரு காவிரி வடகரை 
மாந்துறை யுறைவானை 
நிந்தி யாவெடுத் தார்த்தவல் லரக்கனை 
நெரித்திடு விரலானைச் 
சிந்தி யாமனத் தாரவர் சேர்வது 
தீநெறி யதுதானே.

9-2/2667
நீல மாமணி நித்திலத் தொத்தொடு 
நிரைமலர் நிரந்துந்தி 
ஆலி யாவரு காவிரி வடகரை 
மாந்துறை யமர்வானை 
மாலு நான்முகன் தேடியுங் காண்கிலா 
மலரடி யிணைநாளுங் 
கோல மேத்திநின் றாடுமின் பாடுமின் 
கூற்றுவன் நலியானே.

10-2/2668
நின்று ணுஞ்சமண் தேரரும் நிலையிலர் 
நெடுங்கழை நறவேலம் 
நன்று மாங்கனி கதலியின் பலங்களும் 
நாணலின் நுரைவாரி 
ஒன்றி நேர்வரு காவிரி வடகரை 
மாந்துறை யொருகாலம் 
அன்றி யுள்ளழிந் தெழும்பரி சழகிது 
அதுவவர்க் கிடமாமே.

11-2/2669
வரைவ ளங்கவர் காவிரி வடகரை 
மாந்துறை யுறைவானைச் 
சிரபு ரம்பதி யுடையவன் கவுணியன் 
செழுமறை நிறைநாவன் 
அரவெ னும்பணி வல்லவன் ஞானசம் 
பந்தனன் புறுமாலை 
பரவி டுந்தொழில் வல்லவர் அல்லலும் 
பாவமும் இலர்தாமே.
Thiruvidaivoi