4531
என்னிறை யான மருந்து - மகிழ்ந்
தெனக்குத்தன் பொன்மேனி ஈந்த மருந்து
தன்னறி வாகு மருந்து - என்னைத்
தந்த மருந்தென்றன் சொந்த மருந்து ஞான
4532
உள்ளத்தி னுள்ளா மருந்து - என்றன்
உயிருக் கனாதி உறவா மருந்து
தௌ;ளத் தெளிக்கு மருந்து - என்னைச்
சிவமாக்கிக் கொண்ட சிவாய மருந்து ஞான
4533
மெய்ப்பொரு ளென்னு மருந்து - எல்லா
வேதா கமத்தும் விளங்கு மருந்து
கைப்பொரு ளான மருந்து - மூன்று
கண்கொண்ட என்னிரு கண்ணுள் மருந்து ஞான
4534
மதியில் விளைந்த மருந்து - யார்க்கும்
மதிக்கப்ப டாதபொன் வண்ண மருந்து
கதிதரும் இன்ப மருந்து - அருட்
கண்ணால்என் றன்னைக் கலந்த மருந்து ஞான
4535
கற்பூர ஸோதி மருந்து - பசுங்
கற்பூர நன்மணங் காட்டு மருந்து
பொற்பூவின் ஓங்கு மருந்து - என்தற்
போதம் தவிர்த்தசிற் போத மருந்து ஞான