3481
இன்னவா றடியேன் அச்சமுந் துயரும் 

எய்திநின் றிளைத்தனன் அந்தோ
துன்னஆ ணவமும் மாயையும் வினையும் 

சூழ்ந்திடும் மறைப்பும்இங் குனைத்தான்
உன்னவா சற்றே உரைக்கவா ஒட்டேம் 

என்பவால் என்செய்வேன் எனது
மன்னவா ஞான மன்றவா எல்லாம் 

வல்லவா இதுதகு மேயோ   
3482
எள்ளலாம் பயத்தால் துயரினால் அடைந்த 

இளைப்பெலாம் இங்குநான் ஆற்றிக்
கொள்ளவே அடுத்தேன் மாயையா திகள்என் 

கூடவே அடுத்ததென் அந்தோ
வள்ளலே எனது வாழ்முதற் பொருளே 

மன்னவா நின்னலால் அறியேன்
உள்ளல்வே றிலைஎன் உடல்பொருள்ஆவி 

உன்னதே என்னதன் றெந்தாய்   
3483
என்சுதந் தரம்ஓர் எட்டுணை யேனும் 

இல்லையே எந்தைஎல் லாம்உன்
தன்சுதந் தரமே அடுத்தஇத் தருணம் 

தமியனேன் தனைப்பல துயரும்
வன்சுமை மயக்கும் அச்சமும் மறைப்பும் 

மாயையும் வினையும்ஆ ணவமும்
இன்சுவைக் கனிபோல் உண்கின்ற தழகோ 

இவைக்கெலாம் நான்இலக் கலவே   
3484
அறிவொரு சிறிதிங் கறிந்தநாள் முதல்என் 

அப்பனே நினைமறந் தறியேன்
செறிவிலாச் சிறிய பருவத்தும் வேறு 

சிந்தைசெய் தறிந்திலேன் உலகில்
பிறிதொரு பிழையுஞ் செய்திலேன் அந்தோ 

பிழைத்தனன் ஆயினும்என்னைக்
குறியுறக் கொண்டே குலங்குறிப் பதுநின் 

குணப்பெருங் குன்றினுக் கழகோ   
3485
ஐயநான் ஆடும் பருவத்திற் றானே 

அடுத்தநன் னேயனோ டப்பா
பொய்யுல காசை எனக்கிலை உனக்கென் 

புகல்என அவனும்அங் கிசைந்தே
மெய்யுறத் துறப்போம் என்றுபோய் நினது 

மெய்யருள் மீட்டிட மீண்டேம்
துய்யநின் உள்ளம் அறிந்ததே எந்தாய் 

இன்றுநான் சொல்லுவ தென்னே