3466
மண்ணினீள் நடையில் வந்தவெந் துயரை 

மதித்துளம் வருந்திய பிறர்தம்
கண்ணினீர் விடக்கண் டையவோ நானும் 

கண்ணினீர் விட்டுளங் கவன்றேன்
நண்ணிநின் றொருவர் அசப்பிலே என்னை 

அழைத்தபோ தடியனேன் எண்ணா
தெண்ணியா துற்ற தோஎனக் கலங்கி 

ஏன்எனல் மறந்தனன் எந்தாய்  
  அசைப்பிலே - படிவேறுபாடு ஆ பா 
3467
தேட்டிலே மிகுந்த சென்னையில் இருந்தால் 

சிலுகுறும் என்றுளம் பயந்தே
நாட்டிலே சிறிய ஊர்ப்புறங் களிலே 

நண்ணினேன் ஊர்ப்புறம் அடுத்த
காட்டிலே பருக்கைக் கல்லிலே புன்செய்க் 

களத்திலே திரிந்துற்ற இளைப்பை
ஏட்டிலே எழுத முடியுமோ இவைகள் 

எந்தைநீ அறிந்தது தானே   
  சிறுகுறும் - முதற்பதிப்பு, பொ சு, சமு க பதிப்பு 
3468
என்புடை வந்தார் தம்முகம் நோக்கி 

என்கொலோ என்கொலோ இவர்தாம்
துன்புடை யவரோ இன்புடை யவரோ 

சொல்லுவ தென்னையோ என்றே
வன்புடை மனது கலங்கிஅங் கவரை 

வாஎனல் மறந்தனன் எந்தாய்
அன்புடை யவரைக் கண்டபோ தெல்லாம் 

என்கொலோ என்றயர்ந் தேனே   
  இன்புடை - சமு க பதிப்பு 
3469
காணுறு பசுக்கள் கன்றுக ளாதி 

கதறிய போதெலாம் பயந்தேன்
ஏணுறு மாடு முதல்பல விருகம் 

இளைத்தவை கண்டுளம் இளைத்தேன்
கோணுறு கோழி முதல்பல பறவை 

கூவுதல் கேட்டுளங் குலைந்தேன்
வீணுறு கொடியர் கையிலே வாளை 

திர்த்தல்கண் டென்என வெருண்டேன்   
  மிருகம் - முதற்பதிப்பு, பொ சு, சமுக, பி இரா பதிப்பு 
3470
பிதிர்ந்தமண் உடம்பை மறைத்திட வலியார் 

பின்முன்நோக் காதுமேல் நோக்கி
அதிர்ந்திட நடந்த போதெலாம் பயந்தேன் 

அவர்புகன் றிட்டதீ மொழிகள்
பொதிந்திரு செவியில் புகுந்தொறும் பயந்தேன் 

புண்ணியா நின்துதி எனும்ஓர்
முதிர்ந்ததீங் கனியைக் கண்டிலேன் வேர்த்து 

முறிந்தகாய் கண்டுளம் தளர்ந்தேன்