1861
சிறியேன் றவமோ வெனைப்பெற்றார்
செய்த தவமோ வீண்டடைந்தீ
ரறியே னொற்றி யடிகேளிங்
கடைந்த வாறென் னினைத்தென்றேன்
பொறிநே ருனது பொற்கலையைப்
பூவார் கலையாக் குறநினைத்தே
யெறிவேல் விழியா யென்கின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ
1862
அளிக்குங் குணத்தீர் திருவொற்றி
யழக ரேநீ ரணிவேணி
வெளிக்கொண் முடிமே லணிந்ததுதான்
விளியா விளம்பத் திரமென்றேன்
விளிக்கு மிளம்பத் திரமுமுடி
மேலே மிலைந்தாம் விளங்கிழைநீ
யெளிக்கொண் டுரையே லென்கின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ
1863
வாசங் கமழு மலர்ப்பூங்கா
வனஞ்சூ ழொற்றி மாநகரீர்
நேசங் குறிப்ப தென்னென்றே
னீயோ நாமோ வுரையென்றார்
தேசம் புகழ்வீர் யானென்றேன்
றிகழ்தைத் திரிதித் திரியேயா
மேசங் குறிப்ப தென்கின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ
1864
பேசுங் கமலப் பெண்புகழும்
பெண்மை யுடைய பெண்களெலாங்
கூசும் படியிப் படியொற்றிக்
கோவே வந்த தென்னென்றேன்
மாசுந் தரிநீ யிப்படிக்கு
மயங்கும் படிக்கு மாதருனை
யேசும் படிக்கு மென்கின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ
1865
கொடியா லெயில்சூ ழொற்றியிடங்
கொண்டீ ரடிகள் குருவுருவாம்
படியா லடியி லிருந்தமறைப்
பண்பை யுரைப்பீ ரென்றேனின்
மடியா லடியி லிருந்தமறை
மாண்பை வகுத்தா யெனிலதுநா
மிடியா துரைப்பே மென்கின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ