56
கையாத துன்பக் கடல்முழ்கி நெஞ்சம் கலங்கிஎன்றன்
ஐயாநின் பொன்அடிக் கோலமிட் டேன்என்னை ஆண்டுகொளாய்
மையார் தடங்கண் மலைமகள் கண்டு மகிழ்செல்வமே
செய்யார் தணிகை மலைஅர சேஅயிற் செங்கையனே

57
செங்கைஅம் காந்தன் அனையமின் னார்தம் திறத்துழன்றே
வெங்கயம் உண்ட விளவாயி னேன்விறல் வேலினைஓர்
அங்கையில் ஏந்திய ஐயா குறவர் அரிதில்பெற்ற
மங்கை மகிழும் தணிகேச னேஅருள் வந்தெனக்கே

58
கேளாது போல்இருக் கின்றனை ஏழைஇக் கீழ்நடையில்
வாளா இடர்கொண் டலறிடும் ஓலத்தை மாமருந்தே
தோளா மணிச்சுட ரேதணி காசலத் து ய்ப்பொருளே
நாளாயின் என்செய்கு வேன்இறப் பாய நவைவருமே
59
நவையே தருவஞ்ச நெஞ்சகம் மாயவும் நான்உன்அன்பர்
அவையே அணுகவும் ஆனந்த வாரியில் ஆடிடவும்
சுவையே அமுதன்ன நின்திரு நாமம் துதிக்கவும்ஆம்
இவையேஎன் எண்ணம் தணிகா சலத்துள் இருப்பவனே

60
இருப்பாய மாய மனத்தால் வருந்தி இளைத்துநின்றேன்
பொருப்பாய கன்மப் புதுவாழ்வில் ஆழ்ந்தது போதும்இன்றே
கருப்பாழ் செயும்உன் சுழல்அடிக் கேஇக் கடையவனைத்
திருப்பாய் எனில்என்செய் கேன்தணி காசலத் தௌ;ளமுதே