முந்தைய நாயனார் அடுத்த நாயனார்

3.3. கண்ணப்ப நாயனார் புராணம் (650-835)

திருச்சிற்றம்பலம்

650 மேலவர் புரங்கள் செற்ற விடையவர் வேத வாய்மைக்
காவலர் திருக் காளத்திக் கண்ணப்பர் திரு நாடு என்பர்
நாவலர் புகழ்ந்து போற்றும் நல் வளம் பெருகி நின்ற
பூவலர் வாவி சோலை சூழ்ந்த பொத்தப்பி நாடு
3.3.1
651 இத் திரு நாடு தன்னில் இவர் திருப் பதியாதென்னில்
நித்தில அருவிச் சாரல் நீள் வரை சூழ்ந்த பாங்கர்
மத்த வெம் களிற்றுக் கோட்டு வன் தொடர் வேலி கோலி
ஒத்த பேர் அரணம் சூழ்ந்த முது பதி உடுப்பூர் ஆகும்
3.3.2
652 குன்றவர் அதனில் வாழ்வார் கொடுஞ் செவி ஞமலி யாத்த
வன்றிரள் விளவின் கோட்டு வார்வலை மருங்கு தூங்கப்
பன்றியும் புலியும் எண்கும் கடமையும் மானின் பார்வை
அன்றியும் பாறை முன்றில் ஐவனம் உணங்கும் எங்கும்
3.3.3
653 வன் புலிக் குருளையோடும் வயக் கரி கன்றினோடும்
புன்றலைச் சிறு மகார்கள் புரிந்து உடன் ஆடல் அன்றி
அன்புறு காதல் கூற அணையும் மான் பிணைகளோடும்
இன்புற மருவி ஆடும் எயிற்றியர் மகளிர் எங்கும்
3.3.4
654 வெல் படைத் தறுகண் வெஞ்சொல் வேட்டுவர் கூட்டம் தோறும்
கொல் எறி குத்து என்று ஆர்த்துக் குழுமிய ஓசை அன்றிச்
சில்லரித் துடியும் கொம்பும் சிறு கண் ஆகுளியும் கூடி
கல் எனும் ஒலியின் மேலும் கறங்கிசை அருவி எங்கும்
3.3.5
655 ஆறலைத்து உண்ணும் வேடர் அயற் புலங் கவர்ந்து கொண்ட
வேறு பல் உருவின் மிக்கு விரவும் ஆன் நிரைகள் அன்றி
ஏறுடை வானம் தன்னில் இடிக் குரல் எழிலி யோடு
மாறுகொள் முழக்கங் காட்டும் மதக்கை மாநிரைகள் எங்கும்
3.3.6
656 மைச் செறிந்தனைய மேனி வன் தொழில் மறவர் தம்பால்
அச்சமும் அருளும் என்றும் அடைவிலார் உடை வன் தோலார்
பொச்சை யின் நறவும் ஊனின் புழுக்கலும் உணவு கொள்ளும்
நச்சழற்பகழி வேடர்க்கு அதிபதி நாகன் என்பான்
3.3.7
657 பெற்றியால் தவமுன் செய்தான் ஆயினும் பிறப்பின் சார்பால்
குற்றமே குணமா வாழ்வான் கொடுமையே தலை நின்றுள்ளான்
வில் தொழில் விறலின் மிக்கான் வெஞ்சின மடங்கல் போல்வான்
மற்றவன் குறிச்சி வாழ்க்கை மனைவியும் தத்தை என்பாள்
3.3.8
658 அரும் பெறல் மறவர் தாயத்தான்ற தொல் குடியில் வந்தாள்
இரும் புலி எயிற்றுத் தாலி இடை இடை மனவு கோத்துப்
பெரும் புறம் அலையப் பூண்டான் பீலியும் குழையும் தட்டச்
சுரும்புறு படலை முச்சிச் சூர் அரிப் பிணவு போல்வான்
3.3.9
659 பொருவரும் சிறப்பின் மிக்கார் இவர்க்கு இனிப் புதல்வர் பேறே
அரியது என்று எவரும் கூற அதற்படு காதலாலே
முருகலர் அலங்கல் செவ்வேள் முருகவேள் முன்றில் சென்று
பரவுதல் செய்து நாளும் பராய்க் கடன் நெறியில் நிற்பார்
3.3.10
660 வாரணச் சேவலோடும் வரிமயிற் குலங்கள் விட்டுத்
தோரண மணிகள் தூக்கிச் சுரும்பணி கதம்பம் நாற்றிப்
போரணி நெடுவேலோற்குப் புகழ்புரி குரவை தூங்கப்
பேரணங்கு ஆடல் செய்து பெருவிழா எடுத்த பின்றை
3.3.11
661 பயில் வடுப் பொலிந்த யாக்கை வேடர்தம் பதியாம் நாகற்கு
எயிலுடைப் புரங்கள் செற்ற எந்தையார் மைந்தர் ஆன
மயிலுடைக் கொற்ற ஊர்தி வரையுரங் கிழித்த திண்மை
அயிலுடைத் தடக்கை வென்றி அண்ணலார் அருளினாலே
3.3.12
662 கானவர் குலம் விளங்கத் தத்தைபால் கருப்பம் நீட
ஊனமில் பலிகள் போக்கி உறுகடன் வெறி ஆட்டோ டும்
ஆன அத் திங்கள் செல்ல அளவில் செய் தவத்தினாலே
பான்மதி உவரி ஈன்றால் என மகப் பயந்த போது
3.3.13
663 கரிப்பரு மருப்பின் முத்தும் கழை விளை செழுநீர் முத்தும்
பொருப்பின் மணியும் வேடர் பொழி தரு மழையே அன்றி
வரிச் சுரும்பு அலைய வானின் மலர் மழை பொழிந்தது எங்கும்
அரிக்குறுந் துடியே அன்றி அமரர் துந்துபியும் ஆர்த்த
3.3.14
664 அருவரைக் குறவர் தங்கள் அகன் குடிச் சீறூர் ஆயம்
பெரு விழா எடுத்து மிக்க பெருங்களி கூறும் காலைக்
கருவரை காள மேகம் ஏந்தியது என்னத் தாதை
பொருவரைத் தோள்களாரப் புதல்வனை எடுத்துக் கொண்டான்
3.3.15
665 கருங் கதிர் விரிக்கும் மேனி காமரு குழவி தானும்
இரும்புலி பறழின் ஓங்கி இறவுளர் அளவே அன்றி
அரும் பெறல் உலகமெல்லாம் அளப்பரும் பெருமை காட்டித்
தருங்குறி பலவும் சாற்றும் தன்மையிற் பொலிந்து தோன்ற
3.3.16
666 அண்ணலைக் கையில் ஏந்தற்கு அருமையால் உரிமைப் பேரும்
திண்ணன் என்றியம்பும் என்னத் திண்சிலை வேடர் ஆர்த்தார்
புண்ணியப் பொருளாய் உள்ள பொருவில் சீர் உருவினானைக்
கண்ணினுக்கு அணியாத் தங்கள் கலன்பல அணிந்தார் அன்றே
3.3.17
667 வரையுறை கடவுட் காப்பு மறகுடி மரபில் தங்கள்
புரையில் தொல் முறைமைக்கு ஏற்பப் பொருந்துவ போற்றிச் செய்து
விரையிளந் தளிருஞ் சூட்டி வேம்பு இழைத்து இடையே கோத்த
அரை மணிக் கவடி கட்டி அழகுற வளர்க்கும் நாளில்
3.3.18
668 வருமுறைப் பருவம் தோறும் வளமிகு சிறப்பில் தெய்வப்
பெருமடை கொடுத்துத் தொக்க பெருவிறல் வேடர்க்கெல்லாம்
திருமலி துழனி பொங்கச் செழுங்களி மகிழ்ச்சி செய்தே
அருமையில் புதல்வர் பெற்ற ஆர்வமும் தோன்ற உய்த்தார்
3.3.19
669 ஆண்டு எதிர் அணைந்து செல்ல விடும் அடித் தளர்வு நீங்கிப்
பூண் திகழ் சிறு புன் குஞ்சிப் புலியுகிர்ச் சுட்டி சாத்தி
மூண்டெழு சினத்துச் செங்கண் முளவு முள் அரிந்து கோத்த
நாண்டரும் எயிற்றுத் தாலி நலங்கிளர் மார்பில் தூங்க
3.3.20
670 பாசொளி மணியோடு ஆர்த்த பன் மணிச் சதங்கை ஏங்க
காசொடு தொடுத்த காப்புக் கலன் புனை அரைஞாண் சேர்த்தித்
தேசுடை மருப்பில் தண்டை செறிமணிக் குதம்பை மின்ன
மாசறு கோலம் காட்டி மறுகிடை ஆடும் நாளில்
3.3.21
671 தண் மலர் அலங்கல் தாதை தாய் மனம் களிப்ப வந்து
புண்ணிய கங்கை நீரில் புனிதமாம் திருவாய் நீரில்
உண்ணனைந்து அமுதம் ஊறி ஒழுகிய மழலைத் தீஞ் சொல்
வண்ண மென் பவளச் செவ்வாய் குதட்டியே வளரா நின்றார்
3.3.22
672 பொரு புலிப் பார்வைப் பேழ்வாய் முழை எனப் பொற்கை நீட்டப்
பரிஉடைத் தந்தை கண்டு பைந்தழை கைக் கொண்டோ ச்ச
இரு சுடர்க் குறு கண் தீர்க்கும் எழில் வளர் கண்ணீர் மல்கி
வருதுளி முத்தம் அத்தாய் வாய் முத்தம் கொள்ள மாற்றி
3.3.23
673 துடிக் குறடு உருட்டி ஓடித் தொடக்கு நாய்ப் பாசம் சுற்றிப்
பிடித்து அறுத்து எயினப் பிள்ளைப் பேதையர் இழைத்த வண்டல்
அடிச் சிறு தளிரால் சிந்தி அருகுறு சிறுவரோடும்
குடிச் செறு குரம்பை எங்கும் குறு நடை குறும்பு செய்து
3.3.24
674 அனையன பலவும் செய்தே ஐந்தின் மேல் ஆன ஆண்டின்
வனை தரு வடிவார் கண்ணி மறச் சிறு மைந்த ரோடும்
சினை மலர்க் காவுகள் ஆடி செறிகுடிக் குறிச்சி சூழ்ந்த
புனை மருப் புழலை வேலிப் புறச்சிறு கானிற் போகி
3.3.25
675 கடு முயல் பறழினோடுங் கான ஏனத்தின் குட்டி
கொடு வரிக் குருளை செந்நாய் கொடுஞ் செவிச் சாபம் ஆன
முடுகிய விசையில் ஓடித் தொடர்ந்து உடன் பற்றி முற்றத்து
இடு மரத் திரளில் கட்டி வளப்பன எண்ணிலாத
3.3.26
676அலர் பகல் கழிந்த அந்தி ஐயவிப் புகையும் ஆட்டிக்
குலமுது குறத்தி ஊட்டிக் கொண்டு கண் துயிற்றிக் கங்குல்
புலர ஊன் உணவு நல்கிப் புரி விளையாட்டின் விட்டுச்
சில முறை ஆண்டு செல்ல சிலை பயில் பருவம் சேர்ந்தார்
3.3.27
677 தந்தையும் மைந்தனாரை நோக்கித் தன் தடித்த தோளால்
சிந்தை உள் மகிழப் புல்லிச் சிலைத் தொழில் பயிற்ற வேண்டி
முந்தை அத் துறையில் மிக்க முதியரை அழைத்துக் கூட்டி
வந்த நாள் குறித்தது எல்லாம் மறவர்க்குச் சொல்லி விட்டான்
3.3.28
678 வேடர் தம் கோமான் நாதன் வென்றி வேள் அருளால் பெற்ற
சேடரின் மிக்க செய்கைத் திண்ணன் வில் பிடிக்கின்றான் என்று
ஆடியல் துடியும் சாற்றி அறைந்த பேர் ஓசை கேட்டு
மாடுயர் மலைகள் ஆளும் மறக் குலத் தலைவர் எல்லாம்
3.3.29
679 மலை படு மணியும் பொன்னும் தரளமும் வரியின் தோலும்
கொலை புரி களிற்றுக் கோடும் பீலியின் குவையும் தேனும்
தொலைவில் பல் நறவும் ஊனும் பலங்களும் கிழங்கும் துன்றச்
சிலை பயில் வேடர் கொண்டு திசை தொறும் நெருங்க வந்தார்
3.3.30
680 . மல்கிய வளங்கள் எல்லாம் நிறைந்திட மாறில் சீறூர்
எல்லையில் அடங்கா வண்ணம் ஈண்டினர் கொணர்ந்தா எங்கும்
பல்பெருங் கிளைஞர் போற்றப் பராய்க் கடன் பலவும் செய்து
வில் விழா எடுக்க என்று விளம்பினான் வேடர் கோமன்
3.3.31
681 பான்மையில் சமைத்துக் கொண்டு படைக்கலம் வினைஞர் ஏந்த
தேனலர் கொன்றையார் தம் திருச்சிலைச் செம்பொன் மேரு
வானது கடலின் நஞ்சும் ஆக்கிட அவர்க்கே பின்னும்
கான ஊன் அமுதம் ஆக்கும் சிலையினைக் காப்புச் செய்தார்
3.3.32
682 சிலையினைக் காப்புக் கட்டும் திண் புலி நரம்பில் செய்த
நலமிகு காப்பு நன்னாண் நாகனார் பயந்த நாகர்
குலம் விளங்கு கரிய குன்றின் கோலம் முன்கையில் சேர்த்தி
மலை உறை மாக்கள் எல்லாம் வாழ்த்த எடுத்து இயம்பினார்கள்
3.3.33
683 ஐவன அடிசில் வெவ்வேறு அமைந்தன புற்பாற் சொன்றி
மெய் வரைத் தினை மென் சோறு மூங்கில் வன் பதங்கள் மற்றும்
கைவினை எயினர் ஆக்கிக் கலந்த ஊன் கிழங்கு துன்றச்
செய் வரை உய்ப்ப எங்கும் கலந்தனர் சினவில் வேடர்
3.3.34
684 செம் தினை இடியும் தேனும் அருந்துவார் தேனில் தோய்த்து
வெந்த ஊன் அயில்வார் வேரி விளங்கனி கவளம் கொள்வார்
நந்திய ஈயல் உண்டி நசையொடு மிசைவார் வெவ்வேறு
அந்தமில் உணவின் மேலோர் ஆயினர் அளவிலார்கள்
3.3.35
685 அயல் வரைப் புலத்தின் வந்தார் அருங்குடி இருப்பின் உள்ளார்
இயல் வகை உணவில் ஆர்ந்த எயிற்றியர் எயினர் எல்லாம்
உயர் கதிர் உச்சி நீங்க ஒழிவில் பல் நறவு மாந்தி
மயலுறு களிப்பின் நீடி வரிசிலை விழவு கொள்வார்
3.3.36
686 பாசிலைப் படலைச் சுற்றிப் பன் மலர்த் தொடையல் சூடிக்
காசுடை வடத் தோல் கட்டி கவடி மெய்க் கலன்கள் பூண்டார்
மாசில் சீர் வெட்சி முன்னா வருதுறைக் கண்ணி சூடி
ஆசில் ஆசிரியன் ஏந்தும் அடற் சிலை மருங்கு சூழ்ந்தார்
3.3.37
687 தொண்டக முரசும் கொம்பும் துடிகளும் துளை கொள் வேயும்
எண்டிசை நிறைந்து விம்ம எழுந்த பேர் ஒலியினோடும்
திண்டிறல் மறவர் ஆர்ப்புச் சேண் விசும்பு இடித்துச் செல்லக்
கொண்ட சீர் விழவு பொங்கக் குறிச்சியை வலம் கொண்டார்கள்
3.3.38
688 குன்றவர் களி கொண்டாடக் கொடிச்சியர் துணங்கை ஆட
துன்றிய மகிழ்ச்சியோடும் சூர் அரமகளிர் ஆட
வென்றி வில் விழவினோடும் விருப்புடை ஏழாம் நாளாம்
அன்றிரு மடங்கு செய்கை அழகுற அமைத்த பின்னர்
3.3.39
689 வெங்கதிர் விசும்பின் உச்சி மேவிய பொழுதில் எங்கும்
மங்கல வாழ்த்து மல்க மருங்கு பல்லியங்கள் ஆர்ப்பத்
தங்கள் தொல் மரபின் விஞ்சைத் தனுத் தொழில் வலவர் தம்பால்
பொங்கொளிக் கரும் போர் ஏற்றைப் பொருசிலை பிடிப்பித்தார்கள்
3.3.40
690 பொற்றட வரையின் பாங்கர்ப் புரிவுறு கடன் முன் செய்த
வில் தொழில் களத்தில் நண்ணி விதிமுறை வணங்கி மேவும்
அற்றை நாள் தொடங்கி நாளும் அடல் சிலை ஆண்மை முற்றக்
கற்றனர் என்னை ஆளும் கானவர்க்கு அரிய சிங்கம்
3.3.41
691 வண்ணவெஞ் சிலையும் மற்றப் படைகளும் மலரக் கற்று
கண்ணகல் சாயல் பொங்கக் கலை வளர் திங்களே போல்
எண்ணிரண்டு ஆண்டின் செவ்வி எய்தினார் எல்லை இல்லாப்
புண்ணியம் தோன்றி மேல் மேல் வளர் அதன் பொலிவு போல்வார்
3.3.42
692 இவ் வண்ணம் திண்ணனார் நிரம்பு நாளில்
இருங் குறவர் பெருங்குறிச்சிக்கு இறைவன் ஆய
மை வண்ண வரை நெடுந் தோள் நாகன் தானும் மலை எங்கும்
வனம் எங்கும் வரம்பில் காலம்
கை வண்ணச் சிலை வேட்டை ஆடித் தெவ்வர் கண
நிரைகள் பல கவர்ந்து கானம் காத்து
மெய் வண்ணந்தளர் மூப்பின் பருவம் எய்தி வில்லுழவின்
பெரு முயற்சி மெலிவன் ஆனான்
3.3.43
693 அங்கண் மலைத் தடஞ்சாரல் புனங்கள் எங்கும்
அடலேனம் புலி கரடி கடமை ஆமா
வெங் கண் மரை கலையொடு மான் முதலாய் உள்ள மிருகங்கள்
மிக நெருங்கி மீதூர் காலைத்
திங்கள் முறை வேட்டை வினை தாழ்தது என்று சிலை
வேடர் தாம் எல்லாம் திரண்டு சென்று
தங்கள் குல முதல் தலைவன் ஆகி உள்ள தண் தெரியல்
நாகன் பால் சார்ந்து சொன்னார்
3.3.44
694 சொன்ன உரை கேட்டலுமே நாகன் தானும் சூழ்ந்து
வரும் தன் மூப்பின் தொடர்வு நோக்கி
முன் அவர்கட்கு உரை செய்வான் மூப்பினாலே முன்பு போல்
வேட்டையினில் முயல கில்லேன்
என் மகனை உங்களுக்கு நாதனாக எல்லீரும் கைக்
கொண்மின் என்ற போதின்
அன்னவரும் இரங்கிப் பின் மகிழ்ந்து தம் கோன் அடி வணங்கி
இம் மாற்றம் அரைகின்றார்கள்
3.3.45
695 இத்தனை காலமும் நினது சிலைக் கீழ் தங்கி இனிது
உண்டு தீங்கு இன்றி இருந்தோம் இன்னும்
அத்த! நினது அருள் வழியே நிற்பது அல்லால் அடுத்த நெறி
வேறு உளதோ அதுவே அன்றி
மெய்த்த விறல் திண்ணனை உன் மரபில் சால மேம் படவே
பெற்று அளித்தாய் விளங்கு மேன்மை
வைத்த சிலை மைந்தனை ஈண்டு அழைத்து நுங்கள் வரை
ஆட்சி அருள் என்றார் மகிழ்ந்து வேடர்
3.3.46
696 சிலை மறவர் உரை செய்ய நாகன் தானும் திண்ணனை
முன் கொண்டுவரச் செப்பி விட்டு
மலை மருவு நெடும் கானில் கன்னி வேட்டை மகன் போகக்
காடு பலி மகிழ்வு ஊட்ட
தலை மரபின் வழி வந்த தேவராட்டிதனை அழைமின் என
அங்குச் சார்ந்தோர் சென்று
நிலைமை அவள் தனக்கு உரைப்ப நரை மூதாட்டி நெடிது வந்து
விருப்பினோடும் கடிது வந்தாள்
3.3.47
697 கானில் வரித்தளிர் துதைந்த கண்ணி சூடிக் கலை
மருப்பின் அரிந்த குழை காதில் பெய்து
மானின் வயிற்று அரிதாரத் திலகம் இட்டு மயில் கழுத்து
மனவு மணி வடமும் பூண்டு
தான் இழிந்து இரங்கி முலை சரிந்து தாழத் தாழைப்பீலி
மரவுரி மேல் சார எய்திப்
பூ நெருங்கு தோரை மலி சேடை நல்கிப் போர் வேடர்
கோமானைப் போற்றி நின்றாள்
3.3.48
698 நின்ற முதுகுறக்கோலப் படிமத்தாளை நேர் நோக்கி
அன்னை நீ நிரப்பு நீங்கி
நன்று இனிதின் இருந்தனையோ என்று கூறும் நாகன்
எதிர் நலம் பெருக வாழ்த்தி நல்ல
மென் தசையும் ஈயலொடு நறவும் வெற்பில் விளை
வளனும் வேண்டிற்று எல்லாம்
அன்று நீ வைத்தபடி பெற்று வாழ்வேன் அழைத்த பணி
என் என்றாள் அணங்கு சார்ந்தாள்
3.3.49
699 கோட்டமில் என்குல மைந்தன் திண்ணன் எங்கள்
குலத் தலைமை யான் கொடுப்பக்கொண்டு பூண்டு
பூட்டுறு வெஞ் சிலை வேடர் தம்மைக் காக்கும் பொருப்புரிமை
புகுகின்றான் அவனுக்கு என்றும்
வேட்டை வினை எனக்கு மேலாக வாய்த்து வேறு
புலங் கவர் வென்றி மேவு மாறு
காட்டிலுறை தெய்வங்கள் விரும்பி உண்ணக் காடு பலி
ஊட்டு என்றான் கவலை இல்லான்
3.3.50
700 மற்று அவன்தன் மொழி கேட்ட வரைச் சூராட்டி மனமகிழ்ந்து
இங்கு அன்போடு வருகின்றேனுக்கு
எற்றையினுங் குறிகள் மிக நல்ல ஆன இதனாலே உன்
மைந்தன் திண்ணனான வெற்றி வரிச்
சிலையோன் நின் அளவில் அன்றி மேம்படுகின்றான்
என்று விரும்பி வாழ்த்திக்
கொற்றவன் தெய்வங்கள் மகிழ ஊட்ட வேண்டுவன
குறைவின்றிக் கொண்டு போனாள்
3.3.51
701 தெய்வ நிகழ் குற முதியாள